கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் 68 பேரின் உயிரை பலிவாங்கிய விஷச்சாராய வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த 68 பேர் உயிரிழந்தனர். 229 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.  

இந்த வழக்குகளை நீதிபதிகள் டி கிருஷ்ணகுமார், பி பி பாலாஜி அகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வந்தது. அனைத்து தரப்பி வாதங்கள் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

அந்த தீர்ப்பில், கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிபிஐ-க்கு வழங்கவும், சிபிஐ விசாரணைக்கு தமிழக காவல்துறையும் சிபிசிஐடி-யும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என்று கூறிய நீதிபதிகள், தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர். காவல்துறையினருக்கு தெரியாமல் இச்சம்பவம் நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை என்றும் கள்ளச்சாராய விற்பனையை போலீசார் கண்டும் காணமாலும் இருந்தது இச்சம்பவம் மூலம் தெளிவாகிறது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

Night
Day