கள்ளக்குறிச்சி - கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலி - 52 பேர் மருத்துவமனையில் அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 50க்கும் மேற்பட்டோருக்கு கண்கள் மங்கி, வயிற்று வலி ஏற்பட்டதால், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி த.சுரேஷ், ம.சுரேஷ், பிரவீன், சேகர் ஆகிய 4 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சியவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

கள்ளச்சாராயம் குடித்ததாலேயே தங்களது குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க குற்றச்சாட்டியுள்ளனர். கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கள்ளச்சாராயத்திற்கு இனியாரும் உயிரிழக்க கூடாது என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை இல்லை என மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், கள்ளச்சாராய வியாபாரியான கண்ணு குட்டி என்ற கோவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.  அதேவேளையில், சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கள்ளச்சாராய வியாபாரி கோவிந்தராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தம்பி தாமோதரன் மற்றும் அவரது மனைவி விஜயா ஆகியோரை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.




Night
Day