கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் சொந்த தொகுதியான சைதாப்பேட்டையில் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீகாரை சேர்ந்த  11 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதே காரணம் என குற்றசாட்டியுள்ள பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டை அபிஜித் காலனியில் சில நாட்களாக விநியோகிக்கப்படும் குடிநீர் துர்நாற்றம் வீசி வருவதாகவும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் சென்னை குடிநீர் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சைதாப்பேட்டை அப்ஜித் காலனியில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த 11 சிறுவன் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் யுவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பிற்கு குடிநீருடன், கழிவுநீரும் கலந்து வருவதே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியனின் சொந்த தொகுதியில் இந்த அவலமா என கேள்வியெழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் அங்கு விநியோகிப்படும் குடிநீரை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். மேலும் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் குடிநீர் வாரிய அறிக்கைக்கு பிறகே சிறுவன் எதனால் உயிரிழந்துள்ளான் என்பது குறித்து அறியமுடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும்  நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொகுதியில் ஏற்பட்டிருக்கும் அவல நிலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day