குமாரபாளையம் அருகே கன்டெய்னர் லாரி மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு - கொள்ளையன் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஏடிஎம் கொள்ளையர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். கேரளாவில் கொள்ளையடித்துவிட்டு தமிழகத்திற்குள் நுழைந்த போது திரைப்பட பாணியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது வேகமாக வந்த கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றது. மேலும், அங்கிருந்த வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதால், அப்பகுதி மக்கள் உடனடியாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் கண்டெய்னர் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றபோது, வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டுநர் வேகமாக சென்றார். 

இதனால், போலீசார் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று லாரியை நிறுத்த முயற்சித்தபோது, போலீசார் மீது மோதும் வகையில் வந்ததால் போலீசார் அருகில் இருந்த கற்களை எடுத்து லாரியை தாக்கினர். இதில், நிலைகுலைந்து வாகன ஓட்டி லாரியை சாலையின் நடுவில் நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து, போலீசார் அந்த லாரியை சூழ்ந்து சோதனை செய்தபோது, அதில், சில வட வடமாநில கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக லாரியின் கதவை மூடிவிட்டு மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கண்காணிப்பாளர் அதிரடி படையினருடன் வந்து வாகனத்தை சுற்றி வளைத்தனர்.

தொடர்ந்து, ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டு போலீசார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர். அதில், கண்டெய்னர் லாரி கேரளா மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற ஏடிஎம் மிஷின் கொள்ளையர்கள் என தெரியவந்தது. மேலும், லாரிக்குள் இருந்த ராஜஸ்தானை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்ய முயன்றபோது, தப்பியோட முயன்ற லாரி ஓட்டுநர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதையடுத்து, மற்ற 6 பேரை கைது செய்து போலீசார், லாரியில் இருந்த கார்கள், ஏடிஎம் இயந்திரங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

கண்டெய்னரிலிருந்த கொள்ளையர்கள் போலீசார் மீது நடத்திய தாக்குதலில், காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் படுகாயங்களுடன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Night
Day