குமாரபாளையம் - என்கவுன்டர் நடந்த இடத்தில் நீதிபதி ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் திருச்சூரில் இருந்து கண்டெய்னர் வாகனத்தில் வந்த ஏடிஎம் கொள்ளையர்களை போலீசார் விரட்டிப் பிடிக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரியில் தப்பி சென்ற வடமாநில கொள்ளையர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொள்ளையன் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கொள்ளையர்கள் சுட்டதில் பலத்த காயம் அடைந்த காவல்துறை ஆய்வாளர் தவமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட 7 மாநிலங்களில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானா கொள்ளையர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் ஆயுதங்களுடன் ஏ.டி.எம் கொள்ளையர்கள் சிக்கினர். 

தப்ப முயன்ற ஹரியானா கொள்ளையர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறையினர் பிடித்தனர். பின்னர் கண்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில்,கார், ஏ.டி.எம் இயந்திரம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் கன்டெய்னர் லாரி மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையன் ஜிமான்தின் என்பவர் பலியான நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் காயமடைந்த மற்றொரு கொள்ளையனான அஜரத் அலிக்கு ஈரோடு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கைதான இப்ரான், முகமது குக்குராம், செளக்கின்கான், சபீர், முபாரக் ஆகிய 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே ஹரியானா ஏ.டி.எம் கொள்ளையர்கள் பிடிபட்டது தொடர்பாக விசாரிக்க கேரள போலீசார் நாமக்கல் வந்துள்ளனர். திருச்சூர் டி.எஸ்.பி ஜிஜோ தலைமையிலான போலீசார் நாமக்கல் வெப்படை காவல் நிலையத்திற்கு சென்று தகவல்களை திரட்டினர். இதனைதொடர்ந்து என்கவுன்டர் நடந்த இடத்திற்கு சென்று கேரள போலீசார் ஆய்வு செய்தனர்.

இதனிடையே ஆயுதங்களுடன் சிக்கிய ஏ.டி.எம் கொள்ளையர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் எஸ்.பி.ஐ வங்கியின் 3 ஏ.டி.எம்.களை கொள்ளையடித்துவிட்டு நாமக்கல் வந்தபோது பிடிபட்டனர். இதற்கு இடையே கண்டெய்னர் வாகனத்தில் வந்த ஏடிஎம் கொள்ளையர்களை போலீசார் விரட்டிப் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

மேலும் கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது போலீசாரிடமிருந்து பணத்துடன் தப்பி செல்ல முயன்ற கொள்ளையனான ஜிமான்தினை என்கவுன்டர் செய்யும் போது அவர் வைத்திருந்த பையில் இருந்த ரூபாய் நோட்டுக்கள், சிதறி கிடந்த நிலையில், அதனை கைப்பற்றினர்.

இதனிடையே ஹரியானா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது குறித்து சேலம் சரக டிஐஜி உமா விளக்கமளித்துள்ளார். போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதால் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறினார். பணம் அதிகமாக இருக்கும் என்பதை கண்டறித்து எஸ்.பி.ஐ வங்கியை குறிவைத்து கொள்ளை சம்பவங்களை அரங்கேறியிருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே என்கவுன்டர் நடந்த இடத்தில், குமாரப்பாளையம் நீதிமன்ற நீதிபதி மாலதி ஆய்வு செய்தார். என்கவுன்ட்டர் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவல்துறையினர் நீதிபதி மாலதியிடம் விளக்கமளித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடம், கொள்ளையனை மடக்கிபிடித்த இடம் மற்றும் கட்டுகட்டாக பணம் சிதறிக்கிடந்த இடம் ஆகிய பகுதியை நீதிபதி ஆய்வு செய்தார். 

இதனிடையே நாமக்கல் பகுதியில் போலீசாரை கண்டதும் என்ன செய்வது என்று தெரியாமல் கொள்ளையர்கள் கண்டெய்னர் லாரியை சேலம் மாவட்டம் சன்யாசப்பட்டி பகுதியில் தாறுமாறாக ஓட்டிச் சென்றனர். அந்த கண்டெய்னர் லாரியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மடக்கி பிடித்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


Night
Day