எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை பல்லாவரம் அருகே கழிவு நீர் கால்வாயை சரிசெய்யாமலேயே சாலை அமைக்கப்பட்டு வருவது பற்றி கேள்வி எழுப்பிய பொதுமக்களை திமுக கவுன்சிலரின் கணவர் மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூன்று மாதங்களாக துர்நாற்றம் வீசும் நிலையில் திமுக நிழல் கவுன்சிலர் மக்கள் மீது அக்கறை இல்லாமல் அராஜக முகம் காட்டிய விவகாரம் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்....
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் 13-வது வார்டு கவுன்சிலராக திமுகவின் ரேணுகாதேவி பரமசிவம் பதவி வகித்து வருகிறார்...
அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்கு தண்ணீர் புகுந்தது... அதே சமயம் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட, அதை உடைத்து பழைய கால்வாயில் கழிவு நீரை தள்ளிவிட்டது பல்லாவரம் நகராட்சி...
இதனால் வீடுகளுக்கு முன் பல மாதங்களாக கழிவு நீர் தேங்கி நின்று, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக துர்நாற்றம் வீசி வந்தது... ஆனால் திமுக கவுன்சிலர் ரேணுகா எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வந்துள்ளார். எதற்கெடுத்தாலும் ரேணுகாவுக்கு பதிலாக வார்டில் கவுன்சிலர் போல வலம் வரும் அவரது கணவர் பரமசிவம், வெட்டி பந்தா காட்டி, அராஜகமாக செயல்பட்டு வந்துள்ளார்...
பலமுறை கவுன்சிலர் ரேணுகா பரமசிவத்தை சந்தித்த அப்பகுதி மக்கள், முறையான கழிவு நீர் வடிகால் வசதி செய்து, சாலை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்...
இந்நிலையில் 13வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து பணிகளை துவக்கிய ஒப்பந்ததாரர், கழிவு நீர் கால்வாய் பாதையை சரி செய்யாமல் சாலையை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது...
இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் நிழல் கவுன்சிலராக வலம் வரும் ரேணுகாவின் கணவர் பரமசிவத்திடம் முறையிட்டனர்...
அப்போது வார்டு மக்களுக்கு உரிய பதிலளிக்க மறுத்த கவுன்சிலரின் கணவர், பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி உள்ளது...
இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதனையடுத்து, கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
கழிவுநீர் செல்வதற்கு பாதை அமைத்த பிறகு சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்...