கொல்கத்தா : பயிற்சி மருத்துவரின் புகைப்படம், பெயரை சமூக வலைதளங்களில் நீக்க உத்தரவு - உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 8ம் தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பெண் பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த கொடூர சம்பவம் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன், வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தேசிய அளவில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும், வழிகாட்டு நெறிமுறைகள் காகித அளவில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டும் அல்ல ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்சனை எனவும்  நீதிபதிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளதாகவும், இதுதொடர்பாக போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எப்.ஜ.ஆர்., ஏன் தாமதமாக பதிவு செய்யப்பட்டது? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அவர்களுக்கு சம உரிமை மறுக்கப்படுவதாக அர்த்தம் என்றும், ஆர்.ஜி.கார் மருத்துவமனை முதல்வர், பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்ததாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். விசாரணை அறிக்கையை வரும் வியாழக்கிழமைக்குள் சி.பி.ஐ. சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.  மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் இருந்து நீக்கவும், அந்த பெண்ணின் பெயரை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 



 

Night
Day