எழுத்தின் அளவு: அ+ அ- அ
வேலியே பயிரை மேய்ந்தது என்ற பழமொழிக்கு ஏற்ப, பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசாரே செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம், ஒட்டுமொத்த காவல்துறையினருக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலரின் மறுமுகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
பெண்களிடம் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த தலைமை காவலர் சபரி கிரி இவர்தான்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர், தனது வீட்டிற்கு நடந்து செல்லும் போது, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர், மகேஸ்வரி அணிந்திருந்த ஏழு சவரன் தங்க செயினை பரித்துள்ளார்.
சுதாரித்துக் கொண்ட மகேஸ்வரி, தாலியை இறுக பற்றிக் கொண்டதால் நான்கு சவரன் செயினை மட்டும் பறித்து கொண்டு தப்பிச் சென்றான் அந்த கொள்ளையன்.
அதேபோல் கோலார் பட்டியைச் சேர்ந்த அம்சவேணி எனும் பெண், சாலையில் நடந்து சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர், அம்சவேணி அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயினை பறித்து சென்றான்.
ஒரே நாளில் இருவேறு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதால் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர்.
சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன், பொள்ளாச்சி பகுதியில் ஆங்காங்கே சுற்றி திரிந்து இறுதியில், அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் மதுபான விடுதிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் செல்வது பதிவாகி இருந்தது.
மதுபான கூடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஹெல்மெட்டை கழட்டிய நபரைக் கண்டு ஒட்டுமொத்த காவல்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நபர் தங்களுடன் பணியாற்றும் சக காவலர் சபரி கிரி என்பதை உறுதி செய்த போலீசார், தலைமை காவலர் சபரி கிரியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் விடுமுறை தினத்தில் தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சியில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதை அடுத்து, சபரி கிரியை போலீசார் கைது செய்தனர்.
அவரது வீட்டில் நடத்திய சோதனையில், சபரி கிரி கொள்ளையடித்த சென்ற எட்டு சவரன் தங்க செயினை மீட்டனர்.
கைது செய்யப்பட்ட சபரிகிரி, இரு ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தனிப் பிரிவு காவலராக பணியாற்றி வந்தார்.
பின்பு மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர், தற்போது போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
தலைமை காவலர் சபரி கிரி , தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு சீரழிந்தது மட்டுமின்றி, அவரால் ஒட்டு மொத்த காவல்துறையினருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.