சந்தேக புத்தியால் மனைவியை கொன்ற CRPF வீரர்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் நடத்தையில் சந்தேகம் அடைந்த ராணுவ வீரர், மனைவியை நைலான் கயிறால் கழுத்தை இறுக்கி கொடூரமாகக் கொன்றுள்ளார். கொலை குற்றத்தை மறைப்பதற்காக திரைப்படத்தை மிஞ்சும் வகையில் அவர் எடுத்த நூதன முயற்சிகள் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. திருமணம் ஆன மூன்றே மாதங்களில் நடந்த கொடூர கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... 

மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து சி.ஆர்.பி.எப் வீரர் கொலை செய்ததால், மகளை பறிகொடுத்த குடும்பத்தின் கதறல் தான் இது... 

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பங்காரம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரரான ஜெகதீஷுக்கும், அனுஷாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பல கனவுகளுடன் திருமண வாழ்க்கையை ஆரம்பித்து சந்தோஷமாக நாட்களை கடத்திய இருவர் வாழ்க்கையிலும் திடீரென புயல் வீசத் தொடங்கியது. 

திருமணத்திற்கு முன் அனுஷா, அதே ஊரை சேர்ந்த பிரசாத் என்பவருடன் நெருங்கிய நட்புடன் இருந்ததாக ஜெகதீஷின் காதுக்கு தகவல் வர, புதுமணத் தம்பதிக்கு இடையே வெடித்தது பூகம்பம். அனுஷாவின் பழைய நட்பை அறிந்து கொண்ட ஜெகதீஷ், அவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்த முட்டல் மோதல் தொடர்ந்த நிலையில், சில நாட்கள் கழித்து ஜெகதீஷ் வேலைக்கு சென்று விட்டார். திடீரென மீண்டும் ஊருக்கு வந்த ஜெகதீஷ், மனைவியை அழைத்துக் கொண்டு ஜாலியாக பல்வேறு இடங்களுக்கும் சென்று வீடு திரும்பியுள்ளார்.

நாட்கள் உருண்டோட, கடந்த 16ம் தேதி இரவு ஜெகதீஷ், அனுஷா இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் அனுஷாவின் பழைய கதையை கிளறியிருக்கிறார் ஜெகதீஷ். வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக மீண்டும் பிரச்னையை ஏற்படுத்த தொடங்கி விட்டாரே என்ற ஆத்திரத்தில் அனுஷா கூச்சலிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ஜெகதீஷ், தான் ஏற்கனவே வைத்திருந்த நைலான் கயிறால் அனுஷாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். யாரும் பார்க்காத நேரத்தில் அனுஷாவின் உடலை எடுத்துச் சென்று வீட்டினருகே சற்று தூரத்தில் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல் வந்துள்ளார் ஜெகதீஷ்.

அடுத்து கொலையை மறைக்க என்ன செய்யலாம் என்று யோசித்த அவர், மனைவியின் செல்போனை எடுத்து அதில், "பிரசாத் தொடர்ந்து தொல்லை கொடுப்பதால், நான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று டைப் செய்து, அந்த மெசேஜை அனுஷாவின் தாய், தந்தை, சகோதரருக்கு மட்டுமின்றி தன்னுடைய செல்போனுக்கும் அனுப்பியுள்ளார். மெசேஜை பார்த்துவிட்டு பதறித் துடித்த அனுஷாவின் குடும்பத்தினர், ஜெகதீஷின் வீட்டிற்கு சென்று கதறி துடித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அனுஷாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் முதல்கட்டமாக அனுஷாவின் உடலை கைப்பற்றினர். போலீசார் துருவி துருவி நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஜெகதீஷ், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கொலை செய்ததாகவும், பிரசாத் மீது பழிபோட்டு கொலையை தற்கொலையாக திசை திருப்ப முயற்சித்ததாகவும் கூறினார். இதையடுத்து ஜெகதீஷை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருமணம் ஆன மூன்று மாதங்களில், சந்தேகத்தின் பேரில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் மனைவியை கொலை செய்த சம்பவம் பங்காரம்மாபேட்டை கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day