சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்திற்கு முன் திருமயம் பகுதியில் சட்ட விரோதமாக இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஜகபர் அலி கோட்டாட்சியர் அலுவகலத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பாவி ஒருவரின் உயிர் பறிபோனது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான ஜகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளம் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜகபர் அலி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் அது விபத்து அல்ல கொலை என தெரிய வந்ததோடு, சம்பவம் தொடர்பாக கல் குவாரி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், இறப்பதற்கு முன் கடந்த 10ஆம் தேதி ஜகபர் அலி புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பின் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அவர், திருமயம் தாலுகாவில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தன்னை அடியாட்களை கொண்டு சிலர் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். மேலும், இதுகுறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார் ஜகபர் அலி.

மேலும், ஆர்.ஆர்.குரூப்ஸ் என்ற சட்டவிரோத கனிம வள கொள்ளை கும்பல், தொடர்ந்து கனிம வளத்தை கொள்ளையடித்து வருவதாகவும், தாசில்தாரிடம் புகாரளித்த சில நிமிடங்களில், அது குறித்து கொள்ளை கும்பலுக்கு தாசில்தார் தகவல் அளித்ததாகவும் குற்றச்சாட்டினார் ஜகபர் அலி. புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், சட்டவிரோத கும்பலுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறிய அவர், சட்டவிரோத கல்குவாரியை சுற்றி 100க்கும் மேற்பட்ட அடியாட்களை நிற்க வைத்து தட்டிக் கேட்பவர்களை தாக்குவதாகவும் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.

அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிடில், போராட்டத்தில் ஈடுபடுவேன் எனக் கூறிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி, புகார் அளித்த 7 நாட்களில் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவம், விளம்பர திமுக ஆட்சியில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சட்டவிரோதமாக கல்குவாரி நடத்தி வரும் குண்டர்களுக்கு உடந்தையாக இருந்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

Night
Day