எழுத்தின் அளவு: அ+ அ- அ
புதுச்சேரியில் திருமணமான இரண்டே மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது
இரண்டாவது மகள் ரம்யாவிற்கு முத்தியால்பேட்டையை சேர்ந்த தமிழ்மணி என்பவருடன், கடந்த ஜனவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் தமிழ்மணியுடன் ரம்யா குடித்தனம் நடத்தி வந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரம்யாவின் தந்தையான பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்மணி, ரம்யாவை வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுங்கள் என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம், வேறுவழியின்றி மகள் ரம்யாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த ரம்யா சேலத்தில் உள்ள தனது அக்காவிற்கு, தனக்கு வாழ பிடிக்கவில்லை என வாட்ஸ் ஆப்பில் குறுஞ் செய்தி அனுப்பியுள்ளார்.
இதனை கண்ட செளமியா உடனடியாக குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தங்கை அனுப்பிய குறுஞ் செய்தி குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ரம்யாவின் அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உயிரிழந்த ரம்யாவை அவரது கணவர் மற்றும் அவரது அண்ணி நிரஞ்சனா ஆகியோர் திருமணமான நாளிலிருந்தே மனரீதியாக துன்புறுத்தி வந்ததாக ரம்யாவின் மூத்த சகோதரி சௌமியா குற்றம்சாட்டினார்.
ரம்யாவின் சம்பளத்தை தனது குடும்பத்தினரிடம் தான் கொடுக்க வேண்டும் அவர்கள் தான் கணக்கு வழக்கு பார்ப்பார்கள் என தமிழ்மணி வற்புறுத்தியதாகவும், 11 சவரன் நகைகள் கொடுத்தும் வரதட்சணை கேட்டு ரம்யாவை கொடுடைப்படுத்தியதாகவும் சௌமியா கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இது குறித்து முத்தியால்பேட்டை காவல் துறையினர் வழக்குபதிவு செய்து தமிழ்மணியை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவரது குடும்பத்தாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் ஆகி இரண்டு மாதங்களில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.