மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரத்தை தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாதுறையில் நீண்ட நாட்களாக சாராயம் விற்கப்பட்டு வரும் நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனரச்சாட்டு.
பெரம்பூர் அடுத்த முட்டம் கிராமத்தில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்ட சாராய வியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்த நிலையில் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள்? என்று கேட்ட 17 வயது சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிகேட்ட ஹரிஷ் என்ற இளைஞரையும், பொறியியல் மாணவர் ஹரிசக்தி ஆகியோரை சாராய வியாபாரிகளான ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.
இந்த கொடூர கொலை தாக்குதலால் அப்பாவி இளைஞர்கள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவரை கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பியோடிய மூவேந்தனையும் போலீஸார் கைது செய்தனர். இதனிடையே கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி, உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே பெற்றோரும், உறவினர்களும் நள்ளிரவில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உறவினர்கள் உடல்களை வாங்க மறுத்துள்ளதால் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.