சாராய வியாபாரிகளின் வீடுகளுக்கு தீ வைத்து..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கள்ளச் சாராய விற்பனையை தட்டிக் கேட்ட 2 இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டை படுகொலை சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கள்ளச்சாராய வியாபாரிகளின் வீடுகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன. 

மயிலாடுதுறை அருகே முட்டம் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கள்ளச் சாராய விற்பனையை தட்டி கேட்பவர்களை சாராய வியாபாரிகள் அடிப்பதும், கொலை மிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாவட்ட அளவில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளி வந்த ராஜ்குமார் மீண்டும் சாராய விற்பனையை தொடங்கியுள்ளார். அப்போது, எங்கள் தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று கேட்ட தினேஷ் என்ற சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை முட்டம் வடக்குத் தெருவை சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞரும், பேச்சாவடி பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவன் ஹரிசக்தி ஆகிய இருவரும் தட்டிகேட்டுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் ராஜ்குமார் மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் தகறாரில் ஈடுபட்டு, இளைஞர்கள் இருவரையும் சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் சம்பவ இட்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார். இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் இந்த இரட்டை படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், படுகொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி கல்லூரி மாணவர் மற்றும் இளைஞரின் உறவினர்கள் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சாராய வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே சாராய வியாபாரி ராஜ்குமார் வீட்டிற்கு தீ வைத்து மக்கள் பொருட்களை சூறையாடினர். மற்றொரு சாராய வியாபாரியான மூவேந்தன் வீடும் பொதுமக்களால் சூறையாடப்பட்டது

இதனிடையே, இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பாக, மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மூவேந்தனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மது போதையில் மூவேந்தன், ராஜ்குமார், தங்கதுரை ஆகியோர், அங்கு நின்று பேசிக் கொண்டிருந்த தினேஷை தாக்கமுயன்றனர். இதை தடுக்க முயன்ற ஹரிஷ், ஹரி சக்தி, ஆகியோருக்கு பலத்த கத்தி காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், முன்விரோதம் காரணமாக மட்டுமே இந்த படுகொலை நடந்துள்ளதாகவும், கள்ளச்சாராய விற்பனை காரணம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது படுகொலைக்கான காரணத்தை மூடி மறைக்கும் செயல் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

varient
Night
Day