சினிமாவை மிஞ்சும் பயங்கரம்..! வெட்டி சாய்க்கப்பட்ட ரவுடிகள்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல்ராஜா மற்றும் தஞ்சாவூரில் ரவுடி குறுந்தையன் என அடுத்தடுத்து ஒரே நாளில் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அதிரவைத்துள்ளது. விளம்பர திமுக ஆட்சியில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகள் மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. 

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான வசூல்ராஜாவை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் பலர் கண்முன்னே மிககொடூரமாக படுகொலை செய்துள்ளது. தனது வீட்டின் அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த ரவுடி வசூல்ராஜா மீது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில் வசூல்ராஜா உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் அப்போதும் விடாமல் அவரை சுத்துப்போட்ட மர்ம கும்பல் தலை, கை, கால்கள் என அரிவாளால் சரமாரியாக வெட்டிச்சாய்த்திருக்கிறது. சம்பவ இடத்திலேயே வசூல்ராஜா துடிதுடித்து உயிரிழந்தை உறுதி செய்த பிறகு கொலை கும்பல் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது. ரவுடி வசூல்ராஜாவை தீர்த்துக்கட்டிவிட்டு ஒருவர் பைக்கில் தப்பிச்செல்ல பின்னாலேயே மற்றோருவரும் தப்பியோடியதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வசூல்ராஜாவின் உடலை மீட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியான வசூல்ராஜா மீது ஏற்கெனவே கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்படியான சூழலில் தான் சமீபத்தில் வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளிவந்த வசூல்ராஜாவை மர்ம கும்பல் ரத்தம் தெறிக்க தெறிக்க படுகொலை செய்திருக்கிறது. நாட்டு வெடிகுண்டு வீசியது மட்டுமின்றி வசூல்ராஜா உயிர்பிழைக்கவே கூடாது என்ற நோக்கத்தில் கொலை கும்பல் அரிவாளால் வெட்டிய போக்கை பார்க்கும் போது முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் அதே கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். 

ஆரம்பத்தில் சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த வசூல்ராஜா 2009-ஆம் ஆண்டு ஜோசப் மற்றும் அவரது நண்பர் இருவரை கொலை செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதியை சேர்ந்த, ஆட்டோ ராஜா என்பவரையும் கொலை செய்ததை அடுத்து ரவுடிகள் மத்தியில் பிரபலமானார். பின்னர் வட்டி தொழிலில் ஈடுபட்ட தொடங்கியதை தொடர்ந்து ராஜா என்ற பெயரை வசூல்ராஜா என மாற்றிக்கொண்டு ஏரியாவில் பிரபல ரவுடியாக உருவெடுத்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் திருந்தி வாழ நினைத்த நிலையில் தான் தற்போது படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். 

ரவுடி வசூல்ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தையே கதிகலங்க வைத்த அதேநேரம், தஞ்சை அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி மீது காரை மோதி கீழே தள்ளி சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டம் ஏழுப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியான குறுந்தையன். ஏழுப்படியில் உள்ள தனது வயலுக்கு காலை பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது அவரை காரில் பின் தொடர்ந்து வந்த கும்பல், பைக்கின் பின்னால் வேகமாக மோதியதாக தெரிகிறது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ரவுடி குறுந்தையன் தன்னை போட்டுத்தள்ளவே கும்பல் வந்திருப்பதை உணர்ந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள வயலுக்குள் ஓடியதாக தெரிகிறது. 


இருந்தும் விடாமல் காரை விட்டு இறங்கிய மூன்று பேர் கொண்ட கும்பல் குறுந்தையனை துரத்திச்சென்றி சுத்துப்போட்டனர். தப்பிக்க வழியின்றி சிக்கிய ரவுடி குறுந்தையனை அவர்கள் தலை, கை, கால் என சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த குறுந்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குறுந்தையனை பழி தீர்த்த கும்பல் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயன்ற நிலையில் வயல் வெளியில் இருந்தவர்கள் 3 பேரில் ஒருவனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில், கடந்த 2013 ஆம் ஆண்டு உலகநாதன் என்பவரையும் 2014 ஆம் ஆண்டு உதயா என்பவரையும் குறுந்தையன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த நிலையில் அந்த கொலைக்கு பழிக்குப் பழியாகவே குறுந்தையன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் பிடிப்பட்ட கொலையாளி வடிவேலு கூலிப்படையை சேர்ந்தவன் என கூறப்படும் நிலையில் கொலைக்கான காரணம் என்ன? கூலிப்படையை ஏவி விட்டது யார்? குறுந்தையனை கறுவறுத்த அந்த நபர் யார்? போன்ற பல கேள்விகளுக்கு போலீசாரின் அடுத்தக்கட்ட விசாரணையின் மூலமே பதில் கிடைக்கும். 

Night
Day