எழுத்தின் அளவு: அ+ அ- அ
பட்டியலின சிறுமியை சித்ரவதை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளை ஆந்திராவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநறுங்குன்றத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஏஜென்ட் மூலம் திருவான்மியூரில் உள்ள திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். பட்டியலின சிறுமி என்பதால் ஆரம்பத்தில் இருந்தே அவர் மீது வன்மத்துடன் இருந்த திமுக எம்எல்ஏவின் மருமகள் மர்லினா, சிறுமி மீது சூடு வைப்பது, கத்தியை கொண்டு வெட்டுவது என பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகத்தையே உளுக்கிய நிலையில் பல்வேறு தரப்பினரின் அழுத்தம் காரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திராவில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பட்டியலின சிறுமியை துன்புறுத்தியது தொடர்பாக திமுக எம்எல்ஏ கருணாநிதி வீட்டில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்ட நிலையில், பல்லாவரத்தில் உள்ள எம்.எல்.ஏ. கருணாநிதியின் வீட்டில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளால் சித்ரவதை செய்யப்பட்ட சிறுமிக்கு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மருமகளால் சித்ரவதை செய்யப்பட்ட சிறுமிக்கு ஏற்படுத்தப்பட்ட காயங்கள் குறித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 10 பேர் கொண்ட மருத்துவர்கள் விசாரித்தனர். அதில் குறிப்பாக உடம்பில் எவ்வளவு காயங்கள் இருக்கின்றன. எத்தனை காயங்கள் ஏற்படுத்தப்பட்டன என்பன உள்ளிட்டவை குறித்து மருத்துவர்கள் கார்த்திகேயன், சங்கீதா, ராஜ்குமார் மற்றும் வினோத் ஆகியோர் ஆர்.எம்.ஓ தலைமையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அத்துடன் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு பிரிவு மருத்துவர்கள் இளம் பெண்ணிடம் பரிசோதனை நடத்தினர்.