சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த விவகாரம் - வெறிநாய் உரிமையாளரின் மனைவி, மகன் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ராட் வீலர் இன நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த 5 வயது குழந்தை ரத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெறி கொண்ட நாய்கள் கடித்ததில், சிறுமியின் தாய்க்கும் லேசாக காயம் ஏற்பட்டுள்ளது. நாய்கள் கடித்ததில் தாய், மகள் இருவரும் காயமடைந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணியாற்றி வருபவர் ரகு. இவரது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக் ஷாவும் பூங்காவில் உள்ள ஒரு சிறு அறையில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். 

சம்பவத்தன்று அப்பகுதியில் வசிக்ககூடிய புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் ராட்வீலர் ரகத்தை சேர்ந்த இரண்டு நாய்களுடன்  பூங்காவிற்கு சென்றுள்ளார். 

அப்போது பூங்காவில் விளையாடி கொண்டு இருந்த சிறுமி சுதக் ஷாவை  இரண்டு நாய்களும் கடுமையாக கடித்து குதரின. குழந்தையின் அழுக்குரல் கேட்டு வந்த தாய் சோனியா வெறி பிடித்த இரண்டு நாய்களிடம் இருந்து தனது குழந்தையை காப்பாற்றி உள்ளார். 

அப்போது அவரது தாய் சோனியாவையும் இரண்டு நாய்களும் கடித்துள்ளது. இதனை கண்ட நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, நாய்களை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். 

நாய்கள் கடித்ததில் தலையில் பயங்கர காயத்துடன் இரத்த வெள்ளத்தில் இருந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனைக்கு அனுமதித்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆயிரம் விளக்கு பகுதி போலீஸார் புகழேந்தியை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தனது செலவில் சிகிச்சை மேற்கொள்வதாக புகழேந்தி கூறியதையடுத்து,  சிறுமி சுதக் ஷாவை  ஆயிரம்  விளக்கு அப்போலோ குழந்தைகள் மருத்துமனைக்கு  மாற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பெண் தெரிவிக்கையில், நாய்களை பூங்காவிற்கு அழைத்து வரும் பொழுது கயிறு கட்டி அழைத்து வராமல், அலட்சியமாக இருந்ததாகவும், நாயின் வாய் பகுதிக்கு எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் அணியாமலும் புகழேந்தி அழைத்து வந்ததாக குற்றம்சாட்டினர்.

ஏற்கனவே அந்த இரண்டு நாய்களும் அந்த பகுதியில் உள்ளவர்களை இரண்டு முறை கடித்துள்ளதாகவும், தொடர்ந்து நாய்களை வளர்த்து புகழேந்தி விற்பனை செய்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

அந்த பகுதியில் உள்ள பெண்கள் கூறும் பொழுது, பிழைப்பிற்காக ஊரில் இருந்து சென்னை வந்து வேலை செய்யும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்தனர். அந்த வலியை குழந்தை எப்படி தாங்கி இருக்கும் என நினைத்தாலே வருத்தமாக இருப்பதாக தெரிவித்தனர்.

பூங்காவில் பணிபுரியும் காவலாளி குடும்பத்திற்கே பாதுகாப்பு இல்லை என்றும், இரவு நேரங்களில் நடந்து செல்லக்கூட அச்சமாக உள்ளதாக தெரிவித்தனர். 

குழந்தை அனுமதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனைக்கு வந்த ஆயிரம் விளக்கு மற்றும் நுங்கம்பாக்கம்  காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம்  விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் சோனியா  தன் மகளுக்கு நடந்ததை  கூற, செய்தி குழுவினர் உடன் பேச வரும் பொழுது காவலர்கள் அதற்கு எங்கள் மேல் உள்ள அதிகாரி அனுமதி கொடுக்கவில்லை என கூறி அவர்களை பேசவிடாமல் தடுத்து நிறுத்தியதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கிட்டதட்ட 2 மணி நேரமாக குழந்தையின் தாயை விசாரிப்பதாக கூறி காவலர்கள் அவர்களை உள்ளே வைத்திருந்தனர். பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அப்போலோ மருத்துமனையின் மற்றொரு கிளைக்கு அனுப்பி வைத்தனர். 

நாயின் உரிமையாளர் புகழேந்தி மற்றும் அவருடைய மனைவி வரலட்சுமி மற்றும் மகன் வெங்கடேஷன்  ஆகிய மூன்று பேரின் மீதும் ஆயிரம் விளக்கு காவல் துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்பதுபோல் சிறுமி படுகாயமடைந்த பிறகு வெறி கொண்ட வளர்ப்பு நாய்களை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து சென்றனர்.

Night
Day