எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆந்திராவில் மூதாட்டியை கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் அடைத்து, திருவள்ளூருக்கு ரயில் மூலம் கொண்டு வந்த தந்தை, மகளை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து புறப்பட்ட ரயில், நேற்றிரவு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. அந்த ரயிலில் வந்த தந்தையும், மகளும் ரயில் நிலையத்திலேயே ஒரு சூட்கேஸை வைத்துவிட்டு வேகமாக செல்ல முற்பட்டனர். இதனை பார்த்து சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், இருவரையும் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், சூட்கேஸில் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அந்த நபர் நெல்லூரை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பதும், அதே பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை நகைக்காக கொலை செய்ததும் தெரியவந்தது. 50 கிராம் நகைகளை உருக்கி வீட்டிலேயே மறைத்து வைத்துவிட்டு, மூதாட்டியின் உடலை சூட்கேஸில் மறைத்து வந்து மீஞ்சூர் கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாலசுப்ரமணியம் மற்றும் அவரது 17 வயது மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.