சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில், மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலியான ஊழியர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் என்கிற கேளிக்கை விடுதியின் கான்கிரீட் மேற்கூரை நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில், கீழ்தளத்தில் இருந்த பணியாளர்களான திருச்சியை சேர்ந்த சைக்ளோன் ராஜ், மணிப்பூரை சேர்ந்த திருநங்கை லில்லி மற்றும் மேக்ஸ் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் உடல்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மெட்ரோ ரயில் பணிகளால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமும் மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விபத்துக்கு மெட்ரோ கட்டுமான பணிகள் காரணமல்ல என மெட்ரோ நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுபானக்கூட ஊழியர்கள் 12 பேரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து,மேலாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த ஊழியர் சைக்ளோன் ராஜாவின் மனைவி மற்றும் உறவினர்கள், அபிராமபுரம் காவல்நிலையத்தில் குவிந்தனர். விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். அப்போது, நான்கு பெண் குழந்தைகளுடன் சைக்ளோன் ராஜாவின் மனைவி கண்ணீர்விட்டு கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.