எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லியில் இருந்து சென்னைக்கு பார்சலில் அனுப்பப்பட்ட ஆயிரத்து 500 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் தொடர்ச்சியாக கெட்டுப் போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆயிரத்து 500 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டை சந்தையில் உள்ள ஆட்டிறைச்சி கடைகளில் நடைபெற்ற சோதனையில் குடோன் ஒன்றில் பாதுகாப்பற்ற முறையில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கிலோ ஆட்டுக்கால்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், வால்டாக் சாலையில் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் அலுவலகத்தில், டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயிரத்து 500 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் சென்ட்ரல் பார்சல் அலுவலகம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், டெல்லியில் இருந்து சென்னைக்கு அனுப்புனர் மற்றும் பெறுநர் முகவரி இன்றி ஆயிரத்து 500 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி, ஆட்டுக்கால் மற்றும் காளான்கள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பார்சலில் வந்துள்ளதாகவும், இதனை பறிமுதல் செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.