சேலம் : ஏற்காடு அருகே லஞ்சம் வாங்கும் விஏஓ உதவியாளர்கள் - வீடியோ வைரல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர்கள் இருவர் மலைவாழ் கிராம மக்களிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணம் குறைவாக கொடுத்தால் ஆத்திரப்படும் கிராம உதவியாளர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கோவிலூர், கூத்துமுத்தல் ஆகிய இரு கிராமங்கள் உள்ளன.

கோவிலூரில் கிராம உதவியாளராக ஜான் விக்டர் என்பவரும், கூத்துமுத்தல் கிராமத்தில் கிராம உதவியாளராக ஆரோக்கியதாஸ் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த நிலையில், இருவரும் கூட்டாக சேர்ந்து கொண்டு மலை கிராம மக்களிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில், ஜான் விக்டர் மலை கிராமவாசி ஒருவரிடம் பட்டா மாறுதலுக்காக ஆயிரத்து  500 ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. மேலும், பணம் குறைவாக இருந்ததால் அந்த நபரை அடிக்க ஜான்விக்டர் கையை ஓங்கியதாகவும் தெரிகிறது. 

தொடர்ந்து கிராமவாசி, மீதி பணத்தை பிறகு தருகிறேன் என்று கூறியதும் ஜான் விக்டர் கூத்துமுத்தல் கிராம உதவியாளரான ஆரோக்கியதாஸை  அழைத்து அந்த பணத்தை கொடுப்பது போலவும், பின்னர் இருவரும் பணத்தை வாங்கிக் கொண்டு செல்வது போலவும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

தொடர்ந்து இரண்டு கிராம உதவியாளர்களும் கோவிலூர் செல்லும் வழியில் நின்று கொண்டு கிராம மக்கள் கொடுத்த நெல் விவசாய உறுதி அடங்கல் மனுவில் கிராம நிர்வாக அலுவலரின் முத்திரையை பதித்து  கொடுப்பது போன்ற காட்சிகளும் பதிவாகி உள்ளன.

கிராம நிர்வாக அலுவலரின் ரப்பர் ஸ்டாம்ப் எப்படி உதவியாளர்கள் கையில் வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சப்பணத்தில் பங்கு செல்கிறதா? என்ற சந்தேககமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு, லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day