எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை பாடியில் உள்ள தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் நகைக்கடையில், ஊழியர்களின் கையாடலால் போலி தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
சென்னை பாடியில் உள்ள தி லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் துணிகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் மட்டுமின்றி, தங்கம் மற்றும் வைர நகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நகைக் கடையில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை ஊழியர்கள் கையாடல் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வருடாந்திர இறுதி கணக்கு முடிவின் போது கடைகளில் இருக்கும் தங்க நகைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. கடந்த 16ம் தேதி நடைபெற்ற ஆய்வில், தங்க கம்மல் விற்பனை பிரிவில் 54 ஜோடி எண்ணிக்கை கொண்ட கம்மல்கள் குறைவாக இருந்ததும், வைர நகை பிரிவில் வைர வளையல், வைர தாலி ஒன்று என 8 நகைகள் குறைவாக இருந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர். கடையின் மேலாளர்களாக பணிபுரியும் இளையராஜா, இசக்கிராஜ், சூரியா மற்றும் பிரசாத்ராஜ் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டது.
அப்போது, ஒவ்வொரு நகைப்பிரிவுக்கும் நியமிக்கப்பட்டுள்ள Incharge-கள் நகைகளை கையாள்வதும், அதனை எடுத்துச் சென்று லாக்கரில் வைப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கம்மல் நகை பிரிவில் Incharge ஆக பணிபுரியும் முத்துக்கிருஷ்ணன் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வெளியான தகவல்கள் அனைவரையும் திக்குமுக்காடச் செய்தது.
தங்க கம்மல் நகைப் பிரிவில் உள்ள உண்மையான நகைகளில் உள்ள ஸ்டிக்கரை, கவரிங் கம்மல் நகைகளுக்கு மாட்டி, கலந்து வைத்தது தெரியவந்தது. கடையில் இருந்து திருடப்பட்ட தங்க நகையை அடமானம் வைத்து, அதிலிருந்து பெற்ற பணத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்ததாக முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வைர நகைப் பிரிவில் உள்ள Incharge விஜயகுமாரிடம் நடந்த விசாரணையில், வைர செயின்களை எடுத்துச் சென்று, அடமானம் வைத்து, தனக்கு இருந்த கடன் பிரச்னையை தீர்த்தாக கூறியுள்ளார்.
முத்துக்கிருஷ்ணன் அடகு வைத்த கடையின் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 19ம் தேதி 5 ஜோடி தங்க கம்மல்களை 2 லட்சத்து ஆயிரத்து 400 ரூபாய் கொடுத்து மீட்டதாக கூறியுள்ளார்.
அதேபோல் விஜயகுமார் அடகு வைத்த கடையின் உரிமையாளர், 24 கிராம் எடைக் கொண்ட தங்க செயினை கடந்த 19ம் தேதி 1 லட்சம் ரூபாய் கொடுத்து மீட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து நகைக்கடையில் கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
ஏழை, எளிய மக்கள் சிறுகச்சிறுக பணம் சேர்த்து, தங்களின் எதிர்க் காலத்திற்காகவும், தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்காகவும் நகைக்கடைகளை நம்பி நகைகள் வாங்குகின்றனர். ஆனால் நகைக்கடைகளில் பணிபுரியும் ஊரியர்கள் இதுபோன்ற நம்பிக்கை துரோகம் செய்வதால், உரிமையாளரை விட கடையை நம்பி வாங்க வந்த ஏழை, எளிய மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் தங்க நகை வாங்கும் போது, அதில் ஐ.எஸ்.ஐ ஹால்மார்க் முத்திரை உள்ளதாக என்பவதையும், 916 தங்க நகையா என்பதையும் ஆராய்ந்து வாங்கினால் இதுபோன்று நடக்கும் மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.