எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மர்ம மரணம் தொடர்பான தடயங்கள் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூர் கிராமத்தில் கருகிய நிலையில் ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த கைரேகை நிபுணர்களும் தனிப்படை போலீசாரும் மீண்டும் தீவிர சோதனை மேற்கொண்டனர். தோட்டம் முழுவதும் தூய்மை பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்து, தடயங்கள் ஏதேனும் உள்ளதா என தீவிரமாக ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, தனது வீட்டில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார், தோப்புவிளையில் இருந்து நேரடியாக திசையன்விளைக்கு வராமல் பல்வேறு கிராமங்களை சுற்றி கார் மூலம் வந்தற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை நடைபெறும் இடங்களில் யாரும் வராமல் இருக்கும் வகையில் பேரிகார்டு வைத்து தடயங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா என ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக 45 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் 30 பேரிடம் போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர் வீட்டிற்கு எதிரே உள்ள கிணற்றில் இருந்து நீரை வெளியேற்றிய நிலையில், அங்கு கண்டெடுக்கப்பட்ட கத்தி, சோப்பு ஆகியவற்றை தடயமாக சேகரித்துள்ளனர். மேலும், அவரது மனைவி ஜெயந்தி மற்றும் மகன்களிடம் விசாரணை நடத்திய நிலையில் அவர்கள் எந்தவித தகவல்களையும் தரவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.