எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக 40 பேரிடம் தனித்தனியாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக நெல்லை மாவட்ட எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார்.
திசையன்விளை அருகே கரைச்சுத்து புதூர் கிராமத்தை சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கேபிகே ஜெயக்குமார், தனது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், ஜெயக்குமார் தனது கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், அதற்கு நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோர்தான் பொறுப்பு என குறிப்பிட்டிருந்தார். ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டு 4 நாட்களான நிலையில், இது தொடர்பாக 8 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் ஜெயக்குமாரின் மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜெய மார்ட்டின் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு உள்ளிட்ட 40 நபர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் தனித்தனியாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படும் என தகவல் தெரிவித்த நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், விசாரணைக்கு பின்னரே ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவரும் என தெரிவித்தார்.
இதனிடையே நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளதால் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கரைச்சுத்து புதூரில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில், நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், தற்கொலை செய்திருந்தால் குரல்வளை முற்றிலும் எரிந்திருக்காது என்றும், ஆனால் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளதாகவும், நுரையீரலில் எவ்வித திரவங்களும் இடம்பெறவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஜெயக்குமார் உயிரிழந்த பிறகு எரியூட்டப்பட்டிருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதால், காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உயிரிழப்பு தொடர்பாக நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் வைத்து போலீசார் நடத்தினர். அப்போது ஜெயக்குமாரிடம் வாங்கிய 78 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்காதது ஏன்? என்றும், தேர்தலின் போது நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக தங்களுக்கு 65 லட்சம் கிடைத்தும் ஜெயக்குமாருக்கு ஏன் தேர்தல் செலவுக்கு பணம் வழங்கவில்லை என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது, ஜெயக்குமாரின் மரணத்தில் இருந்து, தான் இன்னும் மீளவில்லை என்று கூறி போலீசாரின் கேள்விகளுக்கு ரூபி மனோகரன் பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.