எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலுவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமாரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிவந்த நிலையில், கரைசுத்துபுதூர் உவரி அருகேயுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. ஜெயக்குமாரின் மர்ம மரணம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இறப்பதற்கு முன் கடந்த 30ஆம் தேதி அவர் எழுதியதாக கருதப்படும் மரண வாக்குமூலம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், 'தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலு, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உள்ளிட்ட ஆறு பேரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் தன்னிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டனர் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்க பாலுக்கு நெல்லை மாவட்ட காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனுக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இருவரும் 15 நாட்களுக்குள் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சம்மனில் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.