எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமாரின் மரண வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக தனிப்படை போலீசார் தென்காசி விரைந்தனர்.
நெல்லை மாவட்டம் கரைச்சுத்து புதூர் கிராமத்தில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணம் தொடர்பாக எவ்வித தகவலையும் கண்டறிய முடியாமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர். வழக்கு தொடர்பாக ஜெயக்குமாரின் மூத்த மகன் கருத்தையா ஜெஃப்ரினிடம் விசாரணை மேற்கொண்டதில், தந்தை காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட நாளில், தான் தென்காசியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தென்காசி விரைந்த தனிப்படை போலீசார் தனியார் விடுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட தோட்டப்பகுதியில் 4வது முறையாக தடய அறிவியல் ஆய்வக அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களது வீட்டின் முன் இருக்கும் கிணற்றிலும் ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனை நடத்த கிணற்றில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் வீட்டிலும் வேறு ஏதேனும் தடயம் கிடைக்கிறதா? என சோதனை நடத்த தடயவியல் துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.