ஞானசேகரனிடம் மாதாமாதம் மாமூல் வாங்கிய காவல்துறை

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞானசேகரனிடம் ஓ.சி. பிரியாணி வாங்கி சாப்பிட்டு அவரின் தவறான செயல்களுக்கு காவல்துறையே உடந்தையாக இருந்தது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தியபோது வலிப்பு ஏற்பட்டதாக கூறி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஞானசேகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து மீண்டும் விசாரணைக்கு திரும்பினார். இதன்பின்பு வெளியான மருத்துவ அறிக்கையில் ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்படவில்லை, வலிப்பு ஏற்பட்டது போல் நாடகமாடியது அம்பலமானது.

இதற்கிடையே சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் நடந்து வரும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பிரியாணி கடை வைத்திருக்கும் ஞானசேகரனிடம், இலவசமாக பிரியாணி மற்றும் மாமுல் வாங்கி அவர் செய்யும் தவறான நடவடிக்கைகளை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஞானசேகரனிடம் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படும் 6 காவலர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த சிறப்பு புலனாய்வுக்குழுவினர் அந்த செல்போன்களில் உள்ள தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஞானசேகரனிடம் நடத்தப்படும் விசாரணையில் நாள்தோறும் புதிய தகவல் கிடைப்பதால், யார் அந்த சார் என்ற மர்மமும் விரைவில் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக அபிராமபுரம் காவலர் மருதுபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சைபர் கிரைம் போலீசார் கொடுத்த புகாரின் பேரில் அபிராமபுரம் காவலரும் எழுத்தருமான மருது பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  

மேலும், அடையாறு காவல் நிலைய ஓட்டுனராக உள்ள காவலர் கணேஷ், செல்போனில் எத்தனை பிரியாணி வேண்டும் என ஞானசேகரனிடம் கூறியதும், காவல்துறை வாகனத்திலேயே வந்து தினமும் ஓசி பிரியாணி வாங்கி சென்றதும் தெரியவந்துள்ளது. அதேபோன்று, அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர் லியோ, ஞானசேகரன் கைது செய்யப்பட்ட அன்று தொடர்ந்து அவரது செல்போனில் அழைத்துள்ளார். விசாரணையில் ஓசி பிரியாணிக்காக அழைத்ததை காவலர் லியோ ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

Night
Day