டாஸ்மாக்கில் அறிவுரை வழங்கியதால் ஆத்திரம்... கல்லால் தாக்கி காவலர் படுகொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலரை கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த செய்திதொகுப்பில் பார்க்கலாம். 

தமிழகத்தில் கொலை, கொள்ளை, நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன. மக்களை காக்கக்கூடிய காவல்துறையை சேர்ந்தவர்களே படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் நெல்லையில் ஓய்வுப் பெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன், மதுரையில் தனிப்படை காவலர் மலையரசன் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்களின் தாக்கம் தணிவதற்குள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே காவலர் ஒருவர், கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியடைய செய்துள்ளது.

உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். கடந்த 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர், தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து வீடு திரும்பிய முத்துக்குமார், உறவினர் ராஜாராம் உடன் முத்தையன்பட்டி டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்த சென்றுள்ளார். அங்கு கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிய வந்த பொன்வண்டு என்பவர், நண்பர்களுடன் மது அருந்தி கொண்டுள்ளார். அவர்களுடன் ஐக்கியமாகி மது அருந்திய முத்துக்குமார், குற்றச் செயல்களில் ஈடுபடாமல் நேர்மையான வழியில் உழைத்து வாழ வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இது, ஒரு கட்டத்தில் பொன்வண்டு நண்பர்களுக்கு எரிச்சலை தந்துள்ளது.


இந்த அறிவுரைக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொன்வண்டு நண்பர்கள், அங்கு கிடந்த கல்லால் முத்துக்குமாரின் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்துக்குமார், அங்கேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதை தடுக்க வந்த முத்துக்குமாரின் உறவினர் ராஜாராமையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசகேரன் ஆகியோர் சம்பவ இடத்தை சோதனை செய்தனர். மேலும், பிரதே பரிசோதனைக்காக முத்துக்குமாரின் உடலையும், தாக்குதலில் காயமடைந்த ராஜாராமையும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.  


காவலரை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியோடிய பொன்வண்டு மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேரை பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

காவல்துறையில் பணிபுரிந்து வந்த காவலரையே, பட்டப்பகலில் மதுக்கடையில் ஒரு கும்பல் கல்லால் தாக்கி கொலை செய்யும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், விளம்பர திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

Night
Day