எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் சென்னை டிஐஜி பெயரில் முகநூலில் போலி கணக்குகளை உருவாக்கி, பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பெயரில் ஒருவருக்கு முகநூலில் குறுஞ்செய்தி சென்றுள்ளது. முதலில் நலம் விசாரித்த மோசடி நபர், தனது நண்பரான மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் ஆசிஷ்குமார், வெளியூருக்கு இடமாறி செல்வதால் வீட்டு பொருட்களை விற்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், வேண்டுமானால் வாங்கி கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். பிறகு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசியதால் சந்தேகமடைந்த அந்த நபர், ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதேபோல், சென்னையில் பணிபுரியும் டிஐஜி திருநாவுக்கரசு பெயரிலும் முகநூலில் போலி கணக்கு உருவாக்கிய மர்மநபர், திருநாவுக்கரசின் நண்பர் சிவக்குமார் என்பவரை தொடர்பு கொண்டு இதே பாணியில் பணம் பறிக்க முயன்றுள்ளார். சுதாரித்துக் கொண்ட சிவக்குமார், டிஐஜியிடம் தகவல் தெரிவிக்கவே, அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் புகார் அளித்தார். காவல்துறை அதிகாரிகளின் பெயரின் போலி கணக்கை உருவாக்கிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.