தமிழகத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ.200 கோடி ஹவாலா பணம்... சிக்கிய தரகர்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக 200 கோடி ரூபாய் ஹவாலா பணம், முக்கிய கட்சி ஒன்றுக்கு கொடுக்க இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்புடைய ஹவாலா தரகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு  அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா  செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மற்றும்  வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் அலுவலகங்களில்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக திமுக முக்கிய நிர்வாகிகள், அரசு ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வாகன சோதனைகளின் மூலம் பலகோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னைக்கு விமானம் மூலம் வரும் நபர் ஒருவர், ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட இருப்பதாக வந்த தகவலையடுத்து, வருமானவரித்துறையினர்,  கடந்த ஏழாம் தேதி மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த ஹவாலா தரகரான வினோத் குமார் ஜோசப் என்பவரை  மீனம்பாக்கம் விமானநிலையத்தில்  சுற்றி வளைத்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,  பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. 

மிகப்பெரிய ஹவாலா கும்பலுடன் தொடர்பில் இருக்கும் வினோத் குமார் ஜோசப், துபாய் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவரும் தரகராக செயல்பட்டு வருவது தெரியவந்தது. மேலும் பிடிபட்ட வினோத்குமார் ஜோசப்பிடம் இருந்து,  செல்போன்,  ஐ பேட், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்,  அவரது whatsapp chat-களை ஆய்வு செய்தபோது,  துபாயிலிருந்து சென்னைக்கு ஹவாலா முறையில் பணத்தை கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 

குறிப்பாக கடந்த சில நாட்களாக வினோத்குமார் ஜோசப், துபாயை சேர்ந்த செல்வம் என்பவரிடம் பேசி வந்ததும், பாராளுமன்ற தேர்தலுக்காக,  இவர்கள் 200 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை துபாயிலிருந்து  தமிழகத்திற்கு கொண்டுவருதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அப்பு என்கிற விநாயகவேலன் என்பவர் , வினோத் குமார்  ஜோசப்பின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து, ஹவாலா முறையில் கொண்டுவரப்படும் பணத்தை தமிழகத்தில் உள்ள பிரதான கட்சி ஒன்றுக்கு சப்ளை செய்ய இருந்ததாகவும் வருமானவரித் துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் ஹவாலா பரிவர்த்தனையில் துபாயை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், மலேசியாவை சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பதையும்  வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இது, ஹவாலா பரிமாற்றம் தொடர்பான வழக்கு என்பதால்  வினோத் குமார் ஜோசப்பை வருமானவரித்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில்,  எந்த கட்சிக்காக 200 கோடி ரபாய் ஹவாலா பணம் கொண்டு வர திட்டமிடப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Night
Day