எழுத்தின் அளவு: அ+ அ- அ
வேதாரண்யம் அருகே குடும்ப தகராறில் மதுபோதையில் மாமனாரை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு, தலைமறைவான மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கான பின்னணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். 70 வயது விவசாயியான இவர், மனைவி வசந்தா மற்றும் மகள் தமிழ்செல்வியுடன் வசித்து வந்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பாக மகள் தமிழ்செல்வியை அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
மலேசியாவில் 16 ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் சொந்த ஊர் திரும்பியுள்ளார். மணல் வியாபாரம் செய்து வரும் அவர், மனைவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று, தன்னுடன் சேர்ந்து வாழும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு தமிழ்செல்வி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, மதுபோதையில் தமிழ்செல்விக்கு வீட்டுக்கு வந்த செந்தில்குமார், தன்னுடன் வரும்படி கேட்டுள்ளார். தன்னுடன் வரவில்லை என்றால் இரவு முழுவதும் இங்கே தங்குவதாக கூறி தமிழ்செல்வியிடம் செந்தில்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவரின் சத்தம் கேட்டு அங்கு வந்த சுப்பிரமணியன், பிரச்சினை செய்யாமல் இங்கே இருந்து கிளம்பும்படி மருமகன் செந்தில்குமாரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகன், கயிற்றுக்கட்டிலின் கால்கட்டையை எடுத்து மாமனாரை தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சுப்பிரமணியன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேதாரண்யம் போலீசார், சுப்பிரமணியனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மனைவி மீதான கோபத்தில் 70 வயது மாமனாரின் தலையில் மரக்கட்டையால் ஓங்கி அடுத்து மருகமன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.