எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாகை அருகே மகள் மற்றும் தாய்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில், தனது 16 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி சிறுமியின் தாயார் மாவு அரைப்பதற்காக வெளியே சென்றுள்ளார். இதனை, நோட்டமிட்ட கஞ்சா போதை இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து, உறங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்த சிறுமியின் தாயையும் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், சிறுமியின் தாயாருக்கு பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து பாலியல் வன்கொடுமை செய்த முத்துகுமார் என்ற இளைஞரை கைது செய்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கம் வேண்டும் என்று கூறி, பரவை வர்த்தகர்கள் நலச்சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.