எழுத்தின் அளவு: அ+ அ- அ
எட்டையாபுரம் அருகே தாய் மற்றும் மகளை கொடூரமாக கொலை செய்து விட்டு காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த நபரை காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி சுட்டு பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அடுத்த மேலநம்பிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த தாய் சீதாலட்சுமி மற்றும் மகள் ராமஜெயந்தி ஆகியோரை கடந்த 3ம் தேதி மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது. இரட்டைக்கொலை சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் முனீஸ்வரன் என்பவரை முத்துலாபுரம் வைப்பாற்று படுகை காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கீழ ஈரால் பகுதியில் பதுங்கி இருந்த முனீஸ்வரனை கைது செய்ய முயன்றனர்.
அப்போது, முனீஸ்வரன் தான் கையில் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் காவல்துறையை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முனீஸ்வரனின் இடது காலில் குண்டு பாய்ந்து கீழே சுருண்டு விழுந்துள்ளார். மேலும் முனீஸ்வரன் நடத்திய தாக்குதலில் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ், காவலர் ஜாய்சன் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து அனைவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.