எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை மாநகராட்சி திமுக தொழிற்சங்க நிர்வாகி காரில் கடத்தி செல்லப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் திமுக எம்பி குப்புசாமியின் உதவியாளராக இருந்தவர் குமார். அயனாவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் சென்னை மாநகராட்சி திமுக தொழிற்சங்க செயலாளராக இருந்து வந்துள்ளார். மும்பையை சேர்ந்த இவரது உறவினர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நிலம், நீலாங்கரை அடுத்த உத்தண்டியில் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் சிலர் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கானத்தூர் காவல் நிலையம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் குமார் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த நிலத்தில் கடந்த ஒரு வாரமாக தங்கி கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குமார் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து போலீசார் குமாரை தேடி வந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் குமார் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ரவி, விஜய், செந்தில்குமார் என மூவரை தாம்பரம் போலீசார் கைது செய்து, குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். நில அபகரிப்பு புகார் கொடுத்ததால், காரில் கடத்திச் சென்று கொன்று புதைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.