திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் டெல்லியில் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக புள்ளியும், சர்வதேச கடத்தல் மன்னனுமான ஜாபர் சாதிக், டெல்லியில் கைது செய்யப்பட்டார்... கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை வெளி நாடுகளுக்கு ஜாபர் சாதிக் கடத்தியதும், அவருடன் பிரபல திரைப்பட இயக்குநர் அமீருக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

மாயவலை, இறைவன் மிகப் பெரியவன், மற்றும் மங்கை ஆகிய படங்களின் தயாரிப்பாளராக வலம் வந்தவர் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக். இவர், மிகப்பெரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்பது தெரியவந்ததும், திமுக விஐபிக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் ஆடிப்போயுள்ளனர்.

காரணம், ஜாபர் சாதிக்கின் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கில் சினிமா இயக்குநர்களுக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுதான்.
 
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, டெல்லியில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகிய மூவர் தங்களது பாஸ், பிரபல சினிமா தயாரிப்பாளரும், திமுக பிரமுகருமான ஜாபர் சாதிக் எனக்கூறியதை கேட்டு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நிமிர்ந்து உட்கார, தமிழக சினிமா மற்றும் அரசியல் புள்ளிகள் ஷாக் அடித்தது போல திகிலடைந்து தொடர்ந்து தன்னிலை விளக்கம் அடித்து கொண்டிருந்தனர்.

டெல்லியில் இருந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு தேங்காய் பவுடரில் வைத்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்கா அளித்த ரகசிய தகவலால் ஜாபர் சாதிக்கின் சர்வதேச கடத்தல் நெட்வொர்க் அம்பலம் ஆனது.

தலைநகர் டெல்லியின் பசாய் தாராப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் சர்வதேச கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் குடோன் ஒன்றை சுற்றிவளைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேங்காய் பவுடருக்குள் போதைப்பொருளான மெத்தஃபெட்டமைனுக்கு மூலப்பொருளாக விளங்கும் 50 கிலோ ஸ்யூடோஃபெட்ரினை பறிமுதல் செய்தனர்.

தனது கூட்டாளிகளான முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் கைதான நிலையில், ஜாபர் சாதிக் தலைமறைவானார். அவரை தீவிரமாக தேடி வந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கின் வீட்டில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் ஓட்டினர்.

மேலும், விசாரணைக்கு அஞ்சி ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பிச்செல்லாத வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் மறைவிடம் குறித்து ரகசிய தகவல் கிடைக்க, டெல்லியில் உள்ள பங்களா ஒன்றை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

எதிர்பார்த்தது போலவே அங்கு பதுங்கியிருந்த ஜாபர் சாதிக், எவ்வித எதிர்ப்பு தெரிவிக்காமல் அதிகாரிகளிடம் சரணடைந்தார்.

அவரிடம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள், சர்வதேச அளவில் போதைப் பொருளை கடத்தி விற்பனை செய்து, அதில் கிடைத்த வருவாயை சினிமா, கட்டுமானம் மற்றும் மருத்துவ துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். 

மலேசியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தனது போதைப்பொருள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி ஜாபர் சாதிக் செயல்பட்டு வருவதாக போதைப் பொருள் தடுப்பு முகமையின் துணை இயக்குநரான ஞானேஸ்வர் சிங் கூறியுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பல்வேறு நாடுகளுக்கு 45 முறை 3 ஆயிரத்து 500 கிலோ ஸ்யூடோஃபெட்ரின் பார்சல்களை ஜாபர் சாதிக் அனுப்பியுள்ளதாகவும், தேங்காய் உள்ளிட்ட உணவு பொருட்களில் மறைத்து நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு போதை பொருளை கடத்தியுள்ளதாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதான ஜாபர் சாதிக்கிடம் விசாரணையில் திமுகவின் முக்‍கிய அரசியல் புள்ளிகளுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறும் அதிகாரிகள், ஜாபர் சாதிக்குடன் இயக்குநர் அமீருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜாபர் சாதிக் தொடர்பில் இருந்த அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள் என்றும், திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போதைப்பொருள் மூலம் கிடைக்கப்பட்ட வருவாய் எங்கு சென்றதோ அவர்கள் எல்லாம் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிய வந்துள்ள நிலையில் ஜாபர் சாதிக்குடன் கென்யாவுக்கு சென்று வந்த தமிழ் சினிமா மற்றும் அரசியல் திமிங்கலங்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.




varient
Night
Day