திருடிய வீட்டிற்கே மீண்டும் வந்த திருடன்..., வான்டடாக வந்து சிக்கியவரை வெளுத்த மக்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருடிய விட்டிற்கே மறுபடியும் வந்த திருடனை பொதுமக்கள் நையப்புடைத்து போலீசில் ஒப்படைத்தனர். போதை தலைக்கேறிய நிலையில், வீட்டிற்கு செல்ல நினைத்தவர் எப்படி சிக்கினார்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

புதுச்சேரி புறநகர் பகுதியான தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரும் இவரது மனைவியும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் செவ்வாய் கிழமை மதியம்  இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவரான பரமசிவம் என்பவரது வீட்டிற்குள், மர்ம நபர் ஒருவர் ஏறி குதிக்க முயற்சித்துள்ளார், இதனைக் கண்ட பரம்சிவம், அந்த நபரை புகைப்படம் எடுத்ததைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார்.

சிறிது நேரத்திற்கு பிறகு லோகநாதனின் வீடு திறந்திருப்பதை கண்ட பரமசிவம் அவரை செல்போனில் அழைத்து விவரத்தை கூறினார். இதனைத் தொடர்ந்து, பள்ளியில் இருந்து வந்த லோகநாதன் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த கவரிங் நகைகள் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவை காணாமல் போய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த லோகநாதன், பரமசிவம் வீட்டிற்கு ஏறி குதிக்க முயற்சித்த நபரின் புகைப்படத்தை காண்பித்து அவர் மீது சந்தேகம் உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மாலை 7 மணியளவில் மது போதையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் வாகனத்தை ஓட்ட முடியாமல் லோகநாதன் வீட்டருகே தடுமாறி உள்ளார். இதனைக் கண்ட பரமசிவம் அந்த நபர், தனது வீட்டில் சுவர் ஏறிகுதிக்க முயன்ற அதே நபர் என்பதை தெரிந்து கொண்டார். 

உடனடியாக சுதாரித்துக்கொண்ட பரமசிவம், அக்கம்பக்கத்தினரை அழைக்க, அங்கு திரண்ட பொதுமக்கள், போதை ஆசாமியை சரமாரியாக தாக்கி சோதனை செய்துள்ளனர். அப்போது, அவரிடம் லோகநாதனின் வீட்டில் திருடிய கவரிங் நகைகள் மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அந்த நபரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் பிடிபட்ட நபர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அறிவழகன் என்பதும், அவர் மீது கோட்டக்குப்பம் ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், தற்போது நிபந்தனை ஜாமீனில் வந்துள்ள அறிவழகன், விழுப்புரம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருவதும், அவ்வாறு செல்லும் போது இதுபோன்ற திருட்டில் ஈடுபடுவதும் தெரியவந்தது. 

மேலும், ஆசிரியர் வீட்டில் திருடிய பணத்தில் அருகில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் சற்று நேரம் அங்கேயே உறங்கியதும், பின்பு வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் திருடிய வீட்டருகே மீண்டும் வந்தும் தெரியவந்தது. 

இதையடுத்து அறிவழகனிடமிருந்து, 40 ஆயிரம் ரூபாய், கவரிங் நகை மற்றும் அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த திருடன், காவல் நிலையத்தில் கையெழுத்து போட செல்லும் வழியில்  திருடியதும், போதை தலைக்கேரிய நிலையில், திருடிய வீட்டிற்கே மீண்டும் வந்து மாட்டிக்கொண்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day