எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருமணத்தை மீறிய முறையற்ற உறவால் மனைவியை கணவனே கொன்று எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து திருமணம் செய்த மனைவியின் சடலத்தை 110 கிலோ மீட்டர் தூரம் காரில் கொண்டு வந்து வீசிச் சென்ற கொடூர சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தென்காசி மாவட்டம், இலத்தூர் அடுத்த இனாவிலக்கு பகுதியில் உள்ள மதுநாதபேரி குளம் அருகே கடந்த 11ம் தேதி இளம்பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்தப் பெண்ணின் காலில் மெட்டி இருந்துள்ளது. அது மட்டுமல்லாமல், அப்பெண்ணின் இடது கை மற்றும் காலில் உள்ள ஐந்து விரல்களும் எரியாமலே இருந்துள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இலத்தூர் முதல் இனாவிலக்கு வரையிலான சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், உடல் கைப்பற்றப்பட்டதற்கு முந்தைய நாள் இரவு அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று அடிக்கடி சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கார் பதிவு எண் மூலம் நடத்திய விசாரணையில், அந்தக் கார் விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த காரை தன்னுடைய நண்பரான சிவகாசி பாரதி நகரைச் சேர்ந்த ஜான் கில்பர்ட் என்பவர் பயன்படுத்தி வந்ததாக காரின் உரிமையாளர் தெரிவிக்கவே, சம்பந்தப்பட்டவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது உண்மை அம்பலமானது.
இலத்தூர் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தனது மனைவியான 23 வயது கமலி உடையது என்றும், தான்தான் அவரை கொலை செய்து எரித்ததையும் விசாரணையில் ஜான் கில்பர்ட் ஒப்புக்கொண்டார்.
மேலும், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த தானும், கமலியும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதையும் விசாரணையின் போது தெரிவித்த ஜான்கில்பர்ட், கமலிக்கும் வேறு ஒரு நபருக்கும் தகாத உறவு இருப்பது தெரிய வரவே, இதுதொடர்பாக கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து கமலியை இரும்புக் கம்பியால் கொலை செய்ததாகவும், பின்னர் தனது சகோதரர் தங்க திருப்பதி உதவியுடன் கமலியின் உடலை காரில் ஏற்றி அங்கிருந்து சங்கரன்கோவில், திருவேங்கடம் வழியாக சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் காரில் கொண்டு வந்து, இலத்தூர் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத குளத்தின் ஒரு பகுதியில் முட்புதருக்குள் வீசி எரித்ததாகவும் ஜான் கில்பர்ட் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரையும், அவரது சகோதரரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவு காரணமாக காதல் மனைவியைக் கொன்று 2 நாட்களாக சடலத்துடன் காரில் சுற்றிவந்து எரித்த கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.