எழுத்தின் அளவு: அ+ அ- அ
மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்த பெண்ணை, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, தனது காம பசியை தீர்த்துக் கொண்டுள்ளான் கொடூரன் ஒருவன். காம கொடூரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இருந்த இடத்தில் இருந்தே திருமண வரன் பார்க்க இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளது மேட்ரிமோனி இணையதளங்கள்.
இதில் பதிவு செய்தால் திருமணம் நடந்துவிடும் என்ற கனவுகளோடு இளைய தலைமுறையினர் தங்களான துணையை தேட வரன் பதிவிடுகிறார்கள்.
அவ்வாறு பதிவிடுபவர்களிடம் கணிசமான தொகையை மேட்ரிமோனி இணையதளங்கள் வசூலிக்கிறது. பெரும்பாலான மேட்ரிமோனி இணையதளங்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வந்தாலும், ஒருசில மேட்ரிமோனிகளில் பதிவு செய்யப்படும் திருமண வரன் தொடர்பான தகவல்கள் உண்மைதானா என கண்டறிய மேட்ரிமோனி இணையதளங்களும், வரன் தேடுபவர்களும் தவறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபோல வரன் தொடர்பான தகவல்களை உண்மைதானா என கண்டறிய தவறும் ஒருசில மேட்ரிமோனி இணையதளங்களால், பெண்கள் சீரழியும் அவலமும் அரங்கேறி வருகிறது.
இதுபோல் சென்னையில் இயங்கும் பிரபல மேட்ரிமோனி இணையதளம் ஒன்றில் பதிவு செய்த பெண் சீரழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
திருமண வயதடைந்த அவர், தனக்கான துணையை தேர்ந்தேடுக்க சென்னையில் இயங்கி வரும் பிரபல மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர், திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணிற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டில் நல்ல வேலையில் இருப்பதாகவும், ஜாதகத்தை கொடுத்தால் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய இளம் பெண், ஜாதகத்தை கொடுத்த நிலையில், அனைத்து பொருத்தங்களுக்கு சரியாக உள்ளதாகவும், உங்களை நேரில் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். சென்னை வந்த மாரிமுத்து தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி, இளம் பெண்னை அழைத்துள்ளார்.
தனது வருங்கால கணவரை காண ஆசை ஆசையாய் தனியார் விடுதிக்கு சென்றுள்ளார் இளம்பெண். அப்போது மாரிமுத்துவின் பேச்சில் மயங்கிய இளம்பெண்ணுடன் மாரிமுத்து தனிமையில் இருந்துள்ளார்.
இதுபோல் நெதர்லாந்து நாட்டில் இருந்து அவர் சென்னை வரும் போதெல்லாம் நட்சத்திர விடுதியில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இளம் பெண்ணை ஏமாற்றி 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை மாரிமுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வருடமாக இதே போன்று பழகி வந்த சூழ்நிலையில், இளம்பெண்ணிடம் இருந்து தொடர்பை துண்டித்துள்ள மாரிமுத்து, நடந்தவற்றை வெளியே கூறினால், இருவரும் ஒ்னறாக இருந்த ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த இளம்பெண், மாரிமுத்துவின் தாயிடம் நடந்தவற்றை கூறி முறையிட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் அலட்சியமாக பதிலளித்ததால் பாதிக்கப்பட்ட பெண், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாரிமுத்து மற்றும் அவரது தாய் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே மாரிமுத்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை, ஏற்கனவே பாதிக்கப்பட்ட இளம்பெண் செல்போனில் அழைத்து, தனக்கு நடந்ததை தெரிவித்துள்ளார்.
மற்ற பெண்களும் தன்னைபோல் ஏமாறக்கூடாது என கருதிய பாதிக்கப்பட்ட இளம்பெண், மாரிமுத்து மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இனியாவது வரன்கள் குறித்த தகவல்களின் உண்மை தண்மையை மேட்ரிமோனி நிறுவனங்களும், வரன் தேடுபவர்களும் நன்கு ஆராய்ந்து திருமண பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.