துணிக்கடை உரிமையாளர் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம், சித்தூரில் துணிக்கடை உரிமையாளர் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளையடிக்க முயன்ற 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அதிகாலை நேரம் நடத்த கொள்ளை சம்பவம் குறித்து விவரிக்கிறது.. இந்த செய்தி தொகுப்பு...
    
ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள லட்சுமி சினிமா தியேட்டர் அருகே ஆடைகள் மற்றும் பொம்மைகள் விற்பனை செய்யும் துணிக்கடை உரிமையாளர் ஒருவரின் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில், அதிகாலை நேரம் வீட்டில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் கோழி கூவும் சத்தம் கேட்கவில்லை.... மாறாக துப்பாக்கி சத்தமும், அலறல் சத்தமும்தான் கேட்டது... இதனால், அதிர்ச்சியடைந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போது, வீட்டிற்குள் 2 கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். மேலும், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிசூடும் நடத்தியுள்ளனர்..


இதனால், செய்வதறியாமல் திகைத்த வீட்டின் உரிமையாளர்கள் சித்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினரை கண்டதும் கொள்ளையர்கள் தப்பியோடி வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கினர். இதையடுத்து பொதுமக்களின் உதவியுடன் 2 கொள்ளையர்களையும், நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் போலீசார்  மடக்கிப் பிடித்தனர்.   


தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கடும் ஆத்திரத்தில் இருந்த மக்கள் கொள்ளையர்கள் சரமாரியாக அடித்து துவைத்ததால் அவர்களிடம் இருந்து கொள்ளையர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வது போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்தது. ஆந்திராவில், அதிகாலை நேரம் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்குள் மூழ்கியுள்ளனர்.

Night
Day