தொடரும் தீபாவளி சீட்டு மோசடி... ஆசை காட்டி மோசம் செய்த ஆசாமி கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் அரியூரில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாதம் 1,000 ரூபாய் வீதம் 3 ஆயிரம் பேரிடம் 12 மாதங்கள் பணம் வசூலித்து மோசடி செய்தது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு அங்கீகரிக்கப்படாத தனியார் நிறுவனங்களாக தனி நபர்கள் தீபாவளி சீட்டுகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டம் ஊசூரைச் சேர்ந்த தஞ்சான் என்பவர் அரியூர் கிராமத்தில், தணிகைவேல் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருவதோடு, கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து, தீபாவளி சீட்டாக மாதம் 1,000 ரூபாய் வீதம், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளார். அதே போல் தீபாவளி கறி சீட்டு என்ற சீட்டையும் நடத்தி பணம் வசூலித்ததாகத் தெரிகிறது.

இந்த தீபாவளி சீட்டுக்கு, 2 கிராம் தங்க நாணயம், பட்டாசு, எஸ்விஎஸ் ஆயில் 5 லிட்டர் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால், தங்க நாணயமும் பட்டாசும் வழங்காமல் மீதமுள்ள அனைத்து பொருட்களையும் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து அரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கடந்த 4 ஆம் தேதி மோசடியில் ஈடுபட்டதாக தஞ்சானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு கறி கொடுப்பதற்காக வாங்கி வைத்திருந்த 98 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த 98 ஆடுகளையும் ஒரு குடோன் பகுதியில் அடைத்து வைத்த நிலையில், 3 நாட்களாக அவற்றிக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்காததால் 5 ஆடுகள் இறந்து போனதாக கூறப்படுகிறது.

இதனால், அவ்வழியாக சென்ற பொதுமக்களில் சிலர் ஆடு கத்துவதை கண்டு மன வேதனை அடைந்து ஆயிரம் ரூபாய்க்கு அகத்தி கீரை வாங்கிப் போட்டுள்ளனர். இதனால் அரசு அங்கீகாரம் இல்லாத தீபாவளிச் சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அலட்சியமாக செயல்பட்ட அரியூர் போலீசார் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Night
Day