எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மர்மமான முறையில் வீட்டுக்குள் தாய், மகள் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நகைக்காக இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இருவர் உயிரிழந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேல நம்பியாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவரது மகள் ராமஜெயந்தி, தனது கணவர் விஸ்வாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது தாயுடன் மேல நம்பியாபுரத்தில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று இருவரும் தேவாலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், சீதாலட்சுமியும் அவரது மகள் ராமஜெயந்தியும் வீட்டுக்குள் சடலமாக கிடப்பதாக அக்கம்பக்கத்தினர், எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் டி.எஸ்.பி. அசோகன் தலைமையிலான போலீசார், உயிரிழந்து கிடந்த, சீதாலட்சுமி மற்றும் ராமஜெயந்தியின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியரான சீதாலட்சுமியின் கணவர் பூவன் மறைந்துவிட்ட நிலையில், அவரது ஓய்வூதிய பணம் மற்றும் கோவில்பட்டியை அடுத்த கூசாலிப்பட்டியில் உள்ள வீட்டு வாடகை பணம் ஆகியவற்றை கொண்டு தாயும், மகளும் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டுக்குள் சடலமாக கிடந்த சீதாலட்சுமி மற்றும் அவரது மகள் ராமஜெயந்தி ஆகியோர் அணிந்திருந்த கம்மல்கள், 13 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மோப்ப நாய் ஹரீஸ், கைரேகை பிரிவு அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள், கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேல நம்பியாபுரத்தில் இருந்து கோட்டூர் செல்லும் கிராமச் சாலையில் சீதாலட்சுமியின் செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து திருநெல்வேலி சரக (பொறுப்பு) டிஐஜி சந்தோஷ் ஹதி மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, நகைகளுக்காக கொலை செய்யப்பட்டார்களா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தனியாக வசித்து வந்த தாய், மகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி எட்டயபுரம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.