எழுத்தின் அளவு: அ+ அ- அ
கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட காதலிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். 2021ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தபோது, அவருக்கும் அங்கு படித்த களியக்காவிளையை சேர்ந்த கிரீஷ்மா என்பவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உடல் பாகங்கள் செயலிழந்து உயிரிழந்தார்.
மகன் மரணத்தில் கிரீஷ்மா மீது சந்தேகம் எழுப்பி ஷாரோன் ராஜின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ஷாரோன் ராஜுக்கு, காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது.
பெற்றோரின் விருப்பப்படி நெல்லையைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட கிரீஷ்மா, அதற்கு ஷாரோன் ராஜ் இடையூறாக இருப்பார் எனக் கருதி அவரை, 2022ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து கஷாயம் மற்றும் ஜூசில் விஷம் கலந்து கொடுத்தது விசாரணையில் உறுதியானது.
கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதால், ஷாரோன் ராஜ் அந்த திருமணத்தை நிறுத்த இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், வீடியோக்களை புது மாப்பிள்ளையிடம் காட்டிவிடுவாரோ என்ற அச்சத்தில் திட்டமிட்டு அவரை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். ஆனால், பிளாக்மெயில் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிரீஷ்மா, அவரது தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல் குமாரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி பஷீர், கிரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமா நிர்மல் குமாரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்தார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி தாய் சிந்து விடுவிக்கப்பட்டார்.
சனிக்கிழமை நீதிமன்றத்தில் தண்டனை தொடர்பாக நடைபெற்ற வாதத்தின் போது, தனக்கு 24 வயது தான் ஆகிறது, எம்ஏ இலக்கியத்தில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றுள்ளேன், பெற்றோருக்கு நான் ஒரே மகள், எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கிரீஷ்மா கேட்டுக்கொண்டார்.
ஆனால், ஒருவரின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து, அவரைக் கொன்றது கொடூரமான செயல் என்பதால் கிரீஷ்மாவுக்கு அதிகபட்ச தண்டனை தர வேண்டும் என அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள் கிழமை அதிரடி தீர்ப்பு வழங்கியது. உடந்தையாக இருந்த தாய் மாமன் நிர்மல் குமாரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. காதலனை மட்டுமல்ல காதல் உணர்வையும் கிரீஷ்மா கொன்று விட்டதாக 586 பக்க தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, வழக்கை நடத்திய போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.
நாட்டையே உலுக்கியே இந்த சம்பவத்தில் காதலனுக்கு விஷம் கொடுத்த காதலிக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.