பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள செம்பியம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஆம்ஸ்டராங் தனது வீட்டுக்கு அருகே ஆதரவாளர்களுடன் நின்று பேசி கொண்டிருந்தபோது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை சுற்றிவளைத்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது உடன் இருந்த இருவர் அவரை காப்பாற்ற முயற்சித்தபோது அவர்களையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். 

அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெரம்பூர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

பகுஜன் சமாஜின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கொலையாளிகளில் இருவர் உணவு டெலிவரி செய்யும் ஆடை அணிந்து வந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை‌ போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆற்காடு பாலா உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் முன்னிலையில் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், சரணடைந்த 8 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன்பின்னரே கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் எனவும் கூறினார். மேலும் கொலையாளிகள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை எனவும், கத்தியால் தான் வெட்டி கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 



Night
Day