எழுத்தின் அளவு: அ+ அ- அ
தருமபுரி அருகே நகைக்கடைக்குள் குண்டர்களுடன் புகுந்து உரிமையாளரை திமுக பெண் நிர்வாகி தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கந்துவட்டிக்கு வாங்கிய தொகையை முழுவதும் கொடுத்த பின்னரும் நகைக்கடை உரிமையாளருக்கு நேர்ந்த கொடுமை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
நகைக்கடை உரிமையாளரை மகன்கள் மற்றும் குண்டர்களோடு சென்று திமுக பெண் நிர்வாகி தாக்கும் வீடியோ காட்சிகள் தான் இவை.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர், தருமபுரி அடுத்த காரிமங்கலம் கடைவீதி பகுதியில் 25 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவர் அரூர் பகுதியை சேர்ந்த மேற்கு மாவட்ட திமுக தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெயா என்பவரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவ்வப்போது 10 இலட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வட்டிக்கு கடனாக வாங்கியும் அதனை உரிய நேரத்தில் திருப்பி கொடுத்தும் வந்துள்ளார். அவ்வாறு வட்டிக்கு பணத்தை பெறும்போது, கையெழுத்திட்ட வங்கி காசோலை மற்றும் பத்திரங்களையும் திமுக நிர்வாகியுடம் கொடுப்பது வழக்கம்.
கடந்த மாதம் அனைத்து கடனையும் திருப்பி கொடுத்துவிட்டு, தான் கொடுத்த வங்கி காசோலை மற்றும் பத்திரங்களை பிரபு திருப்பி கேட்டுள்ளார். அதற்கு திமுக நிர்வாகி, காசோலை மற்றும் பத்திரங்களை வேறு இடத்தில் வைத்துள்ளதாகவும், 20 நாட்களுக்குள் நகை கடைக்கு வந்து கொடுத்து விடுவதாகவும் உறுதி அளித்துள்ளார். இதனை நம்பி பிரபு தனது கடைக்கு திரும்பி உள்ளார்.
இதற்கிடையே, இரண்டு மகன்கள் மற்றும் அடியாட்களுடன் பிரபுவின் நகைக்கடைக்கு வந்த திமுக பெண் நிர்வாகி தனக்கு இன்னும் 5 கோடி ரூபாய் தரவேண்டும் எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
breathe (கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சி)
மேலும், நீ கையெழுத்து போட்டுக்கொடுத்த காசோலைகள் மற்றும் பத்திரங்கள் தன்னிடம் உள்ளது என்றும், பணம் கொடுக்க வில்லையெனில் கொன்று விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார். மேலும், தான் ஆளும் கட்சியில் பொறுப்பில் உள்ளதால், எங்கு சென்றாலும் உன்னை விடமாட்டேன் எனத் அதிகார வரம்பை காட்டியதோடு, தகாத வார்த்தைகளால் வசை பாடியுள்ளார். மேலும், தனது செல்போன் மூலம் பிரபுவின் தலை மீது பலமாக தாக்கி உள்ளார்.
வாங்கிய பணத்திற்கு கந்து வட்டியாக வாரந்தோறும் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்ததாகவும், ஆனால் தற்போது 5 கோடி ரூபாய் தரவேண்டும் என திமுக பெண் நிர்வாகி கொலை மிரட்டல் விடுத்ததோடு, தன்னை தாக்கியதாகவும் நகைக்கடை உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
திமுகவினர் என்றலோ அராஜகம், ஆக்கிரமிப்பு, ஓசியில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்து தகராறு என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த வரிசையில் தற்போது நகைக்கடையையும் விட்டு வைக்க மாட்டோம் என்ற ரீதியில், திமுக பெண் நிர்வாகி ஒருவர் நகைக்கடை உரிமையாளரை கடுமையாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அராஜகத்தில், ஆண் திமுக நிர்வாகிகளுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் திமுக பெண் நிர்வாகி ஒருவர் நகைக்கடைக்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தியதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையாக உள்ளது என பலரும் நொந்து கொண்டனர்.