எழுத்தின் அளவு: அ+ அ- அ
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், வரும் திங்கட்கிழமை தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்து உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும், மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை ஆகஸ்ட் 10-ந்தேதி கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 50 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை, கடந்த 9-ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம், தண்டனை விவரங்கள் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.