எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிறுவர் உட்பட இருவரை தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், புதிய திருப்பமாக பாடகர் மனோவின் மகன்களை, ஒரு கும்பல் தாக்கும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரனும், மதுரவாயலைச் சேர்ந்த நிதிஷ் என்ற சிறுவனும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயிற்சி முடிந்து வளசரவாக்கம் அருகே உள்ள உணவகத்திற்கு உணவு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்றிருந்த 5 பேர் கொண்ட கும்பல், கிருபாகரன், நிதிஷ் ஆகிய 2 பேரிடமும் தகராறில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கிருபாகரனுக்குத் தலையிலும் நிதிஷுக்கு பல இடங்களிலும் அடிப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த வளசரவாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலில் காயமடைந்த சிறுவன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், தாக்குதல் நடத்திய 5 பேரில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரஃபீக் மற்றும் சாஹீர் இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, வளசரவாக்கம் போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மனோவின் மகன்களான ரஃபீக் மற்றும் சாஹீர் ஆகியோர் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பாடகர் மனோவின் மகன்களான ரஃபீக் மற்றும் சாஹீர் ஆகியோரை 10க்கும் மேற்பட்டோர் கட்டை மற்றும் கற்களை கொண்டு தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சியில் 4 இருசக்கர வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்டோர், மனோவின் இரு மகன்களை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த காட்சியை அடிப்படையாகக் கொண்டு பாடகர் மனோவின் மகன்கள் சார்பில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனோவின் மனைவி ஜமீலா மற்றும் மனோவின் மருமகள் ஆகியோர் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர். அப்போது பேசிய அவர், தங்களிடம் ஆதாரம் இல்லாததால் தான் இதுவரை பேசவில்லை என்றும், தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளில், 10 பேர் கொண்ட கும்பல் தனது மகன்களை தாக்குவது தெளிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்ததால் 2 பேரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் சிறுவர்கள் என்பதால் அவர்களது வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களை விட்டுவிட்டதாக பாடகர் மனோவின் மனைவி தெரிவித்தார். மேலும், தன் மகன்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றும், தன்னை அடித்ததால் தான் தன் மகன்கள் எதிர்தரப்பினரை தாக்கினர் என்றும் மனோவின் மனைவி ஜமீலா கூறினார்.
“இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 16 வயது சிறுவன் என கூறுகிறார்கள். ஆனால் 20 வயதை கடந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேசமயம் 16 வயது சிறுவன் என்றாலும் எந்த குற்றம் வேண்டுமானாலும் செய்யலாமா? என்ற கேள்வியையும் பாடகர் மனோ குடும்பத்தினர் முன்வைத்தனர். மேலும் தங்களிடம் நிறைய ஆதராங்கள் இருப்பதாகவும் காவல்துறையினர் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
மகன்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தெரிவித்தனர்.