பார்வையற்றோர் பள்ளியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை... நீதி விசாரணை கோரி போராட்டம்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் அரசு பார்வையற்றோர் பள்ளியின் வகுப்பறைக்குள் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பார்வை மாற்றுத்திறனாளிகள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடியை சேர்ந்த வெங்கடேசனின் மகள் ராஜேஸ்வரி. பார்வை மாற்றுத்திறனாளியான இவர், திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறைபாடு உடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி வளாகத்துக்குள் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, விடுமுறையான தினமான ஞாயிற்றுக் கிழமை, விடுதியில் இருந்து வகுப்பறைக்கு வந்ததாகவும், அங்கு துப்பட்டாவால் தூக்குப் போட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி ஊழியர்கள், மாணவியை மீட்டு திருச்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


இதுகுறித்து காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளி நிர்வாகிகள் தகவல் அளித்தனர். இதையடுத்து பார்வையற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கினர். 

பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து திருச்சி மருத்துவமனைக்கு முன்பாக குவிந்த பார்வையற்றோர் சங்கத்தினர், மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்றும் கூறி திருச்சி மருத்துவமனை முன்பாக சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


மாணவின் தற்கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததன்பேரில் பார்வையற்றோர் சங்கத்தினர் கலைந்துச் சென்றனர். மாணவியின் இறப்புக் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுவதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிப்பதாகவும், உண்மை குற்றவாளியை கைது செய்த பிறகே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று பார்வையற்றோர் சங்க கூட்டமைப்பினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே பார்வையற்றோர் பள்ளியில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தாமல் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும் தேசிய பார்வையற்றோர் சம்மேளன நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர். பார்வை மாற்றுத்திறனாளி மாணவியின் தற்கொலை சம்பவத்தை கண்டித்து பார்வை மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்தால் திருச்சி மருத்துவமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day