எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அண்ணா நகரில் பிரபல ரவுடி மற்ற ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். யாரை தீர்த்துக்கட்ட காத்துக் கொண்டிருந்தாரோ அவர்களாலேயே ரவுடி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சென்னை அண்ணா நகரில் உள்ள அன்னை சத்யா நகர் முதல் தெருவில் வசிப்பவர்கள் எட்வின் - பூங்கொடி தம்பதி. இவர்களுக்கு சின்ன ராபர்ட், ஜோசப், மோசஸ் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று பேருமே ரவுடிகளாக வலம் வந்த நிலையில் ராபர்ட் அதே பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களிலும் தொடர் கோஷ்டி மோதலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் தான் புதன்கிழமை மாலை ஆறு மணியளவில் தனது வீடு அமைந்துள்ள அண்ணா நகர், அன்னை சத்யா நகர் முதல் தெருவில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் ராபர்ட். அப்போது முகமூடி அணிந்து கொண்டு ஆக்ரோஷமாக வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டு இருசக்கர வாகனங்களில் தப்பியோடியுள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த ராபர்ட்டை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் ராபர்ட்டின் நண்பரான கோகுலை அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடி லோகுவின் கும்பல் கடந்த 2019 ஆம் ஆண்டு வெட்டிச் சாய்த்ததும், இதனால் ஆத்திரமடைந்த ராபர்ட், நண்பனை கொலை செய்த அயனாவரம் லோகு கும்பலை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
யாரை கொல்ல வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தாரோ அவர்களாலேயே வெட்டி சாய்க்கப்பட்ட ராபர்ட், மூன்று மாதங்களுக்கு முன்புதான் பி கேட்டகிரி ரவுடி பட்டியலில் இருந்து ஏ கேட்டகிரி ரவுடியாக மாற்றப்பட்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் ராபர்ட்டை தீர்த்துகட்டிய கும்பல் முன்னதாக அயனாவரத்தை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணையும் வெட்டிவிட்டு அதன் பிறகு தான் ராபர்ட்டை தீர்த்துக்கட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நிகழ்ந்த இந்த படுகொலையால் அன்னை சத்யா நகர் பகுதியில் பதற்றம் சூழ்ந்துள்ளது.
விளம்பர திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதால் எங்கு, எந்த நேரத்தில் என்ன நிகழுமோ என்ற அச்சத்திலும் பதற்றத்திலும் வாழ வேண்டியுள்ள நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை...