புலிப்படை தலைவரிடம் புல்லட்டுகள்...விமான நிலையத்தில் பரபரப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை விமான நிலையத்தில் பிரபல நடிகர் கருணாஸின் கைபையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமான பயணத்தின் போது துப்பாக்கியோ, துப்பாக்கி குண்டுகளோ, எடுத்து செல்ல கூடாது என தெரிந்தும், கருணாஸ் எடுத்து சென்றது ஏன்? அதிகாரிகளிடம் அவர் கூறிய காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு..

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளையும், பயணிகளையும், சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை விமானத்திற்கு, அனுப்பி கொண்டிருந்தனர். 

அப்போது பிரபல திரைப்பட நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான கருணாஸ், சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக வந்திருந்தார். அவருடைய கைப்பையை அதிகாரிகள், ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். அப்போது அந்த கைப்பையில் வெடிபொருள் இருப்பதற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த கைப்பையை தனியே எடுத்து வைத்து விட்டு, கருணாஸிடம் விசாரித்தனர். ஆனால் கருணாஸ் அந்த கைப்பையில் ஆட்சேபகரமான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறினார். 

இதை அடுத்து கைப்பையை, பாதுகாப்பு அதிகாரிகள் திறந்து பார்த்து பரிசோதித்தனர். அதனுள் இரண்டு பாக்ஸ்கள் இருந்தன. அந்த பாக்ஸ்கள் ஒவ்வொன்றிலும், 20 துப்பாக்கி குண்டுகள் வீதம் மொத்தம், 40 லைவ் துப்பாக்கி குண்டுகள் இருந்தன. அவைகள் அனைத்தும் கைத்துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய 32 எம்.எம் ரக குண்டுகள் ஆகும். உடனடியாக துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கருணாஸிடம் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கருணாஸ், தனக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் உள்ளது என்றும் தன்னிடம் உள்ள கை துப்பாக்கியில் பயன்படுத்துவதற்கான குண்டுகள் தான் இவை எனவும் கூறினார். விமானத்தில் குண்டுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்று விதி இருப்பது தனக்கு தெரிந்த ஒன்று தான், என்றும் ஆனால் அவசரமாக புறப்பட்டு வந்ததால், பையில் இருந்த துப்பாக்கி குண்டுகள் பாக்ஸ்களை, கவனிக்கவில்லை என விளக்கம் அளித்தார். அதோடு தனது துப்பாக்கி லைசென்ஸ் மற்றும் அதனை புதுப்பித்த ஆவணங்கள் போன்றவைகளையும் காட்டினார். 

ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு விதிமுறைகளின் படி துப்பாக்கி குண்டுகளை விமானத்தில் எடுத்துச் செல்வது தவறு. எனவே உங்களை இந்த விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்று கூறியதோடு, கருணாஸின் திருச்சி விமான பயணத்தையும் ரத்து செய்தனர். இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், நடிகர் கருணாஸிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த சம்பவம் காரணமாக திருச்சி செல்ல இருந்த விமானம் சுமார் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

Night
Day