எழுத்தின் அளவு: அ+ அ- அ
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி லெனின் தெருவை சேர்ந்தவர் மேகலா. 25 வயதான இவருக்கு பரமேஸ்வரன் என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. திருமணம் முடிந்த ஆரம்ப காலகட்டத்தில் மேகலா தனது கணவருடன், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். ஆனால் காலப்போக்கில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இத்தம்பதியினர் கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேகலா தனது குழந்தைகளை தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு வசித்து வந்தார்.
தனியாக வாழ்ந்து வந்த மேகலா, வருமானத்துக்காக பரமக்குடி பஜார் பகுதியில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அப்போது நாள்தோறும் அவர் செல்லும் வழியில் சோமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நேரில் பேசஆரம்பித்த பின்னர், தங்களது செல்போன் எண்ணைக் பரிமாறிக்கொண்டு காதலை வளர்த்துள்ளனர். மேலும் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் 6 மாத காலம் பரமக்குடியில் உள்ள வாடகை வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
ஆரம்பத்தில் நன்றாக வாழ்ந்து வந்த இவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டுள்ளது. மணிகண்டன் தினந்தோறும் மதுபோதையில் தகராறு செய்வதாகக்கூறி அவருடன் பேசுவதை தவிர்த்த மேகலா, மீண்டும் தனது தாய் வீட்டிற்கே சென்றுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டன் அடிக்கடி தன்னிடம் பேசுமாறு மேகலாவை வற்புறுத்தி டார்ச்சர் செய்துள்ளார். மணிகண்டனின் டார்ச்சரை பொறுத்துக்கொள்ள முடியாத மேகலா அவர் மீது காவல்நிலையத்திலும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
மேகலா தன்னுடன் பேசுவதை தவிர்த்துவிட்டதாலும், காவல்நிலையத்தில் புகார் அளித்ததாலும் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி ஜூஸ் கடையில் மேகலா பணிசெய்துகொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த மணிகண்டன், என்னுடன் ஏன் வாழ வர மறுக்கிறாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேகலாவும் பதிலுக்கு வாக்குவாதம் செய்ததால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மேகலாவின் கழுத்து, முதுகு பகுதிகளில் குத்தியுள்ளார்.
கத்தி மேகலாவின் உடம்புக்குள் இறங்க, ரத்தம் கடையின் வாயிலில் தெறித்து, தேங்கிக் கிடந்த பதைபதைக்கும் காட்சியை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வலிதாங்க முடியாமல் நிலைக்குலைந்த மேகலா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி உயிரிழந்தார். இதனை கண்டு தப்பி ஓட முயன்ற மணிகண்டனை பிடித்த பொதுமக்கள் தரையில் அமரவைத்து முகத்திலேயே தாக்கினர்.
பொதுமக்கள் சூழ்ந்து நிற்க "அவள் என்னை ஏமாற்றி விட்டாள்" என மணிகண்டன் புலம்பும் காட்சிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மேகலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மணிகண்டனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.