பொன்மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்த நிலையில், சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிலை கடத்தல் வழக்கில் தன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்கை நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் நடத்தியுள்ளதாகவும், இவர் மீது சிபிஐ பொய்யான குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறினார். மேலும்,  இந்த வழக்கில் மனுதாரருக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். அப்போது, குறுக்கிட்ட சிபிஐ தரப்பு வழக்கறிஞர், பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை வெளிவரும் என்றும், எனவே அவருக்கு ஜாமின் வழங்க கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் சுபாஷ் கபூருக்கு பொன்மாணிக்கவேல் நேரடியாக உதவி செய்ததற்கான ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பினர். அப்போது சிபிஐ தரப்பில் அதற்கான ஆவணங்கள் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Night
Day